Search This Blog

Wednesday, July 28, 2010

அமெரிக்க கனவு - அதன் விளைவு?

'அமெரிக்க கனவு' என்று ஒன்று உண்டு. அமெரிக்கா மட்டுமின்றி வளர்ந்த நாடாகத் துடிக்கும் ஒவ்வொரு தேசமும் ஓடுவது இதைத் தேடித்தான். என்ன அது? கார், வீடு, ஏ.ஸி., மொபைல் போன், மைக்ரோ வேவ், டோஸ்டர், ஐபாட் போன்றவற்றை வாங்கும் திறன், அதனை ஒட்டிய வாழ்க்கை முறை. இதுதான் அமெரிக்கன் ட்ரீம்!

இதன் விளைவு?

நீர், நில ஆக்கிரமிப்பு, தாவர, மிருக இனங்கள் அழிப்பு, மிதமிஞ்சிய கரிம வாயுவின் வெளியேற்றம், தட்பவெப்ப பருவநிலை மாற்றங்கள், நோய்கள், இயற்கைச் சீற்றங்கள்... அமெரிக்கா துவக்கி வைத்த இந்த வாழ்க்கைமுறை இன்று பூமி பிழைக்குமா என்று சர்ச்சை செய்யும் அளவுக்குக் கொண்டுபோயிருக்கிறது. இது பற்றிய விவாதத்தின் ஓர் அங்கமாக 2001-ல் அப்போதைய அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷிடம், 'அமெரிக்கா தன் வாழ்க்கை முறையை மாற்றிக்கொள்ளவேண்டிய நேரம் வந்துவிட்டதா?' என்று கேட்டதற்கு, 'கண்டிப்பாக இல்லை. நம் வாழ்க்கை முறை நம் வலிமையான பொருளாதார நிலையின் பிரதிபலிப்பு. அமெரிக்க வாழ்க்கை முறை கொண்டாடப்பட வேண்டியது!' என்று பதில் சொல்லியிருந்தார். அவர் பரிந்துரைத்த வாழ்க்கைமுறை அவரையே 2008-ல் சவுதி அரேபியாவிடம் பெட்ரோல் விலைக்காக மண்டியிட வைத்தது.

சரி, பூமியின் தற்போதைய நிலை என்ன?

'ஹாட், ஃப்ளாட் அண்ட் க்ரவுடட்' என்று தலைப்பிலேயே யதார்த்தத்தைச் சொல்கிறார் தாமஸ் ஃப்ரீட்மேன். மூன்று முறை புலிட்சர் விருது பெற்றவரும், 'வாஷிங்டன் போஸ்ட்' பத்திரிகையில் பணிபுரிந்து, உலகம் முழுவதும் சுற்றி வந்தவரும், 'வேர்ல்டு இஸ் ஃப்ளாட்' (World is Flat) என்ற புத்தகத்தின் மூலம் அதிகக் கவனம் பெற்றவருமான ஃப்ரீட்மேன் எழுதியுள்ள இந்தப் புத்தகத்தை நம் பூமி பற்றிய பிராக்ரஸ் ரிப்போர்ட் என்று சொல்லலாம். சரி, என்ன ரிசல்ட்? ஒரே வார்த்தைதான்:

'கவலைக்கிடம்!'

மூன்று நிதர்சனங்களை வரிசையாகச் சொல்கிறார்.

ஹாட்... பூமியின் தட்பவெப்ப நிலை அதிகரிப்பு. தொழில் புரட்சிக்கு பின் நிலக்கரி மற்றும் பெட்ரோலுக்கான தோண்டுதல், எஃகு உற்பத்தி, அதிக கொதிநிலையில் பொருட்கள் உற்பத்தி, வாகனப் புகை என பல காரணங்கள்... பாமர மொழியில் சொன்னால் காடுகள் குறைந்து கார்கள் பெருகி வருவதன் விபரீத முடிவு!

க்ரீன் ஹவுஸ் கேஸஸ் பாதிப்புகள் பற்றிச் சொல்லும்போது மாட்டின் ஏப்பமும் கூட ஒரு முக்கியக் காரணம் என்ற செய்தி தெரிகிறது! மாட்டின் ஏப்பத்தில் உள்ள மீத்தேன் என்ற வாயு கரிம வாயுவை விட 21 மடங்கு சக்தி வாய்ந்தது.

ஒரு மாடு சராசரியாக ஒரு நாளைக்கு 600 லிட்டர் மீத்தேனை வெளியேற்றுகிறது என்று படிக்கும்போது திடுக்கிட்டுப் போகிறோம். மாடு இன்று மிருகமாக எண்ணப்படாமல், பால், இறைச்சி, தோல் உற்பத்தி செய்யும் இயந்திரமாகக் கருதப்பட்டு, மாஸ் புரொடக்ஷன் செய்யப்பட்டதால் வந்த ஆபத்து இது!

அடுத்து ஃப்ளாட்... பூமியின் போக்கு தட்டையாகிறது என்கிறார். இது பூகோள ரீதியாகவோ, பொருளாதார ரீதியாகவோ அல்ல... உலகமயமாக்கமும் தொழில் நுட்பமும் தந்த வாய்ப்புகளால் நடுத்தர வர்க்கம் பெருகுவதுடன் நுகர்தலும் பெருகிவருகிறது. அமெரிக்கக் கனவைத் தேடி ஓடும் ஓட்டத்தால் நாம் சந்தையை மட்டும் பங்கிட்டுக் கொள்ளவில்லை. இயற்கை வளங்களையும்தான்!

புதிய வாய்ப்புகளால் உலகம் தட்டையாகி புதிய வாழ்க்கை முறைக்கு பல கோடி மக்கள் உட்படும்போது அதற்காக செலவு செய்யப்படும் சக்தி (எனர்ஜி) பன்மடங்காகப் பெருகும். அனைவர் வீட்டிலும் விளக்கெரிவதற்கே இனி பல காடுகளை அழிக்கும், பல நிலக்கரி சுரங்கங்கள் ஏற்படுத்தும் நிலை வரலாம்!

மூன்றாவதாக க்ரவுடட்... பூமியின் ஜன நெருக்கடி அதிகரிப்பு. இருவர் தங்கி வந்த அறையில் இருபது பேர் தங்கினால் என்ன நிகழுமோ... அதுதான் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. இன்றைய பூமியின் ஜனத்தொகை 6.7 பில்லியன். இன்னும் 50 வருடங்களில் 40-45% அதிகரிப்பு நிகழும் என்கிறார்கள் வல்லுநர்கள். இதன் பாதிப்பு பின்தங்கிய நாடுகளில் அதிகம். இது எரிபொருள் பற்றாக்குறையிலிருந்து தீவிரவாதம் வரை அனைத்துக்கும் வழிவகுக்கும்.

மக்கள் அனைவருக்கும் உணவு, கல்வி, வேலை தந்து காப்பாற்ற வக்கில்லாத நிலையில், பூமியைக் காப்பாற்றும் முயற்சிகளில் எப்படி ஈடுபடமுடியும்?

இந்தப் புத்தகம் அமெரிக்காவுக்காக எழுதப்பட்டது. 9/11-க்குப் பிறகு பயத்தால், சந்தோஷத்தால் செய்வதறியாது உள்ள தேசத்துக்கு 'கோட் க்ரீன்' (பசுமைப் புரட்சி என்கிறார்) மூலம் உலகத்தைச் சுத்திகரிக்கும் பணிக்குத் தலைமை தாங்க அழைக்கிறார். இதன் சங்கிலித் தொடராக பெட்ரோல் அரசியல், தொழில்நுட்பம், தீவிரவாதம், ஜனத்தொகை, வறுமை என பல கோணங்களை அலசுகிறார். சீனா பற்றி மட்டுமே தனியாக ஒரு பெரிய அத்தியாயம். சீனா மாறினாலே உலகம் மாறிவிடும் என்று வாதாடுகிறார். வேறொன்றுமில்லை, அவ்வளவு ஜனத்தொகை!

அமெரிக்க அதிபர்களின் குறுகியகால கண்ணோட்டங்கள், தொழில் வளர்ச்சிக்காக செய்த சமரசங்கள், குற்றங்கள் என சுவாரஸ்யமாகப் போகிறது புத்தகம். கூடவே, இதைக்கூட பகட்டாக எழுதி உலகம் முழுவதும் விற்க ஒரு அமெரிக்கனால்தான் இயலும் என்று தோன்றுகிறது!

என்ன செய்யலாம் என தீர்மானமான செயல் திட்டங்கள் உள்ளன புத்தகத்தில்! உலகில் எல்லா வாகனங்களிலும் 100% மைலேஜ் அதிகரிக்கச் செய்தால் (ஆராய்ச்சி மூலம்) அதுவே உலகின் எரிபொருள் செலவைப் பாதியாகக் குறைக்கும் என்பன போன்ற பல யோசனைகள் உள்ளன.

அனைத்துத் தொழிலதிபர்களும் அடுத்த நூற்றாண்டைப் பற்றித் தெரிந்துகொள்ள இந்நூல் உதவும். தொழிலில் லாபமும் சுற்றுப்புறத்தின் பாதுகாப்பும் ஒருங்கே சாத்தியம் எனத் தோன்றுகிறது. நம் வாழ்க்கையையும், தொழிலையும் காப்பாற்றும் பொறுப்பை ஆட்சியாளர்கள், மற்றும் அறிவுஜீவிகள் கைகளில் மட்டும் ஒப்படைக்காமல், இவ்விஷயங்களை மக்கள் மன்றத்துக்கு எடுத்துச்செல்வது அவசியம்.

இந்தப் புத்தகத்தை நம் அமைச்சர்கள் படித்தால், தேசத்துக்கு நல்லது. புதிதாகப் பதவியேற்றுள்ள அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு இதைப் பரிந்துரைக்கலாம்... அவர் படிப்பது நம் பூமிபந்துக்கே நல்லது!

Tuesday, July 20, 2010

கோட்லர் மார்க்கெட்டிங் 3.0 யுகத்தின் மார்க்கெட்டிங்கின் 'பத்துக் கட்டளைகள்'

1. வாடிக்கையாளர்களை நேசியுங்கள்; போட்டியாளர்களை மதியுங்கள்.

2. மாற்றத்துக்கு உணர்வுப்பூர்வமாகவும் திருப்பத்துக்குத் தயாராகவும் இருங்கள்.

3. உங்களின் நிறுவனம் மற்றும் பிராண்ட்களின் பெருமையைத் தக்கவைத்துக் கொள்வதுடன் நீங்கள் யார் என்பதிலும் தெளிவாக இருங்கள்.

4. களத்தில் பலதரப்பட்ட வாடிக்கையாளர்கள் இருப்பார்கள்; உங்களுக்கு எந்த ஒரு குறிப்பிட்ட பிரிவினரால் அதிக நன்மைகள் கிடைக்குமோ, அவர்கள் மேல் அதிக அக்கறை செலுத்துங்கள்.

5. நியாயமான விலையில் நல்ல பொருட்களையும் சேவையையும் வழங்குங்கள்.

6. வாடிக்கையாளர்கள் உங்களை எப்போது வேண்டுமானாலும் அணுகக்கூடியவாறு பார்த்துக் கொள்ளுங்கள்; நல்ல விஷயங்களை அனைவரும் அறியும் வகையில் பரவச் செய்யுங்கள் (இந்த தகவல் தொழில்நுட்ப யுகத்தில் இதுவொன்றும் சிரமமான விஷயம் இல்லை). இதன் மூலம் உங்களுக்குப் புதிய வாடிக்கையாளர்கள் கிடைக்கக்கூடும்.

7. வாடிக்கையாளர்களைப் பெறுவதுடன், அவர் களைத் தக்க வைத்துக் கொள்ளவும் மேலும் பெருக்கவும் முயற்சியுங்கள்.

8. நீங்கள் என்ன வியாபாரம், தொழில் செய்தாலும் அதை ஒரு சேவை சம்பந்தப்பட்ட தொழிலாகக் கருதிச் செயல்படுங்கள்.

9. தரம், விலை மற்றும் டெலிவரி சம்பந்தப்பட்ட செயல்களைத் தொடர்ந்து பரிசீலனை செய்யுங்கள்.

10. தேவையான அனைத்து விஷயங்களையும் சேகரியுங்கள். ஆனால் இறுதி முடிவுக்குக் கொஞ்சம் அதிகமாக 'மூளை'யைப் பயன்படுத்துங்கள்.

தப்பு செஞ்சா தப்பே இல்லை!

தப்பு செஞ்சா தப்பே இல்லை!

வேலையில் தவறு செய்யும் ஊழியர்களை சகட்டுமேனிக்குத் திட்டித் தீர்ப்பது அந்தக் காலம். தவறு செய்த ஊழியர் களிடம் தவறை உணர்த்தித் தட்டிக் கொடுத்து, மீண்டும் அவர்கள் அந்தத் தவறை செய்ய முடியாதபடிக்கு மாற்றுவது இந்தக் காலம். அப்படியானால் இப்போது தவறு செய்கிறவர்களை மேலதிகாரிகள் திட்டுவதும் தண்டிப்பதும் இல்லையா..?

''90 சதவிகிதம் குறைந்துவிட்டது. தவறு செய்த ஊழியர்களைத் தண்டிப்பது, அபராதம் விதிப்பது என்கிற காலம் மலையேறிவிட்டது. தவறு செய்தவர்களை தனிமைப்படுத்துவதைவிட அவர்கள் செய்த தவறை உணரச் செய்வது இப்போது பல இடங்களில் நடந்து வருகிறது'' என ஆச்சரியமான பதிலைச் சொல்கிறார் 'மைண்ட் டைனமிக்ஸ் சென்டர்' நிறுவனத்தின் இயக்குனர் முத்தையா ராமனாதன். இந்த புதிய சிந்தனை குறித்து அவர் மேலும் சில விஷயங்களைப் பகிர்ந்துகொண்டார்...

''அரைத்த மாவையே அரைக்கும் ஊழியர்கள் பெரும்பாலும் தவறு செய்வதில்லை. புழக்கத்தில் உள்ள பழைய நடைமுறைகளையே நூல் பிடித்த மாதிரி செய்து ஒப்பேற்றுபவர்களாக இவர்கள் இருப்பார்கள். தங்கள் வேலையை இன்னும் திறமையாகச் செய்வது பற்றி இவர்கள் கனவில்கூட நினைக்க மாட்டார்கள். இவர்களால் நிறுவனத்துக்கு எந்த வளர்ச்சியும் ஏற்படாது. மாறாக, புதிய புதிய முயற்சிகளில் ஈடுபட்டு, அதனால் ஏற்படும் தவறுகளிலிருந்து கற்றுக் கொள்பவர்கள் வித்தியாசமாக யோசித்து வெற்றி காண்பவர்களாக இருப்பார்கள். கற்றலின் ஓர் அங்கமாக தவறுகளை அங்கீகரிக்க வேண்டும் என்பதை நிறுவனங்கள் இப்போது உணரத் தொடங்கி இருக்கின்றன. அதன் விளைவாக 'மேக் மிஸ்டேக்' எனும் புதிய கான்செப்ட் உருவாகியுள்ளது.

உலகின் முன்னணி மென்பொருள் நிறுவனமொன்று தன் பணியாளர்கள் தேர்வின்போது பிற நிறுவனங்களிலிருந்து தவறு செய்து நீக்கப்பட்டவர்களுக்கு முன்னுரிமை அளித்து வருகிறது. காரணம், அவர் ஏற்கெனவே செய்த தவறை மீண்டும் ஒருமுறை செய்ய மாட்டார் என்பதால்தான். தற்போது சில பன்னாட்டு நிறுவனங்கள், தங்கள் நிறுவனத்தில் உள்ள குழுக்களில் ஏதாவது ஒன்றில் தவறுகளே வரவில்லை என்றால் அக்குழுவில் உள்ள நபர்களை வேறு குழுவுக்கு மாற்றிவிடுவார்கள். தவறுகள் நடக்கவில்லை எனில் அங்கே புதிய முயற்சிகள் எதுவும் நடக்கவில்லை என்றுதான் அவர்கள் நினைக்கிறார்கள்.

நிறுவனத்தின் உயர் பொறுப்புகளில் இருக்கும் பலரும் தங்களது தொடக்க காலத்தில் பல்வேறு தவறுகளைச் செய்தவர்கள்தாம். ஒவ்வொரு நிறுவனமும் வாடிக்கையாளர் சேவை மையங்கள் வைத்திருக்கக் காரணம் 'நிறுவனத் தயாரிப்புகளில் நிச்சயம் தவறுகள் வர வாய்ப்பு உண்டு' என்பதை உணர்ந்ததால்தான். வருடாந்திர பராமரிப்புக் கட்டணம் என்பதே தவறுகளைக் கண்டுபிடித்து களையும் செலவினங்களுக்காகவே வசூலிக்கப்படுவதுதானே'' என்று சொன்ன முத்தையா ராமநாதன், ஊழியர்கள் செய்யும் தவறுகளை ஒரு நிறுவனம் எப்படி அணுக வேண்டும் என்பது பற்றியும் ஒவ்வொரு பாயிண்ட்டாக விளக்கினார்.

வேலையில் தவறு செய்தால் உடனடியாக அதன் தாக்கத்தை அறிந்து கொண்டு தலைமையிடம் தெரிவித்துவிடுவது நல்லது. மறைக்காமல் சொல்லப்படும் தவறுகளுக்காக ஊழியர்கள் தண்டிக்கப்பட மாட்டார் கள் என்கிற உறுதிமொழி கொடுக்கப்படும் பட்சத்தில் ஊழியர்கள் எந்தத் தயக்கமும் இன்றி தானாகவே முன்வந்து சொல்வார்கள்.

தவறு நடந்தால் அதைச் செய்தது யார் என்கிற ஆராய்ச்சியில் இறங்குவதற்குப் பதில், அதனால் ஏற்படும் பாதிப்பை சரி செய்வதில் அதிகக் கவனம் செலுத்த வேண்டும்.

தவறு செய்த ஊழியர்களை மன்னித்து விட்டு, அந்தத் தவறு மீண்டும் நடக்காமல் இருக்கத் தேவையான நடவடிக்கைகளில் இறங்க வேண்டும்.

தவறு செய்த ஊழியர்களை பிற ஊழியர்கள் முன்பு திட்டுவதோ, விமர்சிப்பதோ கூடாது. இதனால் அந்த ஊழியர் மனதளவில் பாதிக்கப்படுவதோடு, நிர்வாகத்தின் இமேஜும் கடுமையாகப் பாதிப்படையும்.

தவறு செய்யும்போது சில புதிய அனுபவங்கள், சிந்தனைகள் கிடைக்கலாம். அதனால் சில புதிய யோசனைகள், சிந்தனைகள் நமக்குத் தோன்றலாம்.

தவறு நடந்துள்ளது என்றால் அது ஏன் நடந்தது என்ற நிகழ்வைத்தான் பார்க்க வேண்டுமே தவிர, காரணமானவர்களை கை காட்டுவது வளர்ச்சிக்கு உதவாது.

நிறைய தவறு செய்தவர்கள் பெரிய அனுபவ சாலிகளாக இருப்பார்கள். நிறைய முறை தவறு செய்த வர்கள் மிகச் சிறந்த வழிகாட்டிகளாக இருப்பார்கள். இப்படிப்பட்ட ஒருவரை வைத்து தவறே செய்யாத பல நூறு பேரை நம்மால் உருவாக்க முடியும்.

சிக்கலான பல பிரச்னைகளுக்கு அபத்தமாக பேசுபவர்களிடமிருந்துகூட தீர்வு கிடைக்கலாம். எனவே எதையும் வீண் என்று ஒதுக்கித் தள்ளத் தேவையில்லை.

தவறு நடந்துவிட்டது என்பதை நாம் கண்டுபிடித்துச் சொன்னால் மட்டும் போதாது; அதற் கான தீர்வையும் நாம் கண்டுபிடித்துச் சொன்னால் மட்டுமே நமக்கு பேரும் புகழும் கிடைக்கும்.

தவறே நடக்காத இடத்தில் எல்லோருமே நல்லவர்களாக இருக்கிறார்கள். ஆனால் தவறு நடக்கும் இடத்திலிருந்துதான் எதிர்காலத்தின் தலை விதியை நிர்ணயிக்கும் தகுதியான தலைவர்கள் உருவாகிறார்கள்.

எனவே தவறுகளே நிறுவனங்களை அடுத்த கட்டத்தை நோக்கி நகர்த்துகிற நெம்புகோல் என்பதை மட்டும் மறந்துவிட வேண்டாம்!

நன்றி : நாணயம் விகடன்