Search This Blog

Wednesday, November 17, 2010

மறந்துபோன வாசிப்பை மீட்டு எடுப்பது எப்படி?

ந.வினோத்குமார், படங்கள்:அ.ரஞ்சித்

ஒரு கேள்வி. சமீபத்தில் என்ன புத்தகம் படித்தீர்கள்? நம்மில் பலர் பதில் இல்லாமல்

தடுமாறுவோம். ஏன் இந்தத் தடுமாற்றம்? சமீபத்தில் பார்த்த படம்பற்றி சிலாகிக்க முடிகிறது. 'சச்சின் அந்த பாலை அப்படி ஆடியிருக்கக் கூடாது' என்று விமர்சனம் செய்ய நேரம் இருக்கிறது. பெண்களைப் பற்றியோ, ஆண்களைப்பற்றியோ பேசுவதற்கு நாள் முழுக்க நேரம் இருக்கிறது. இப்படிப் பலவற்றை விவாதிக்கும் நாம், இதுவரை வாசித்த புத்தகங்கள்பற்றி எத்தனை பேரிடம் பேசி இருக்கிறோம்.

'ஒரு மனிதன் எத்தனை புத்தகங்களைப் படித்தான் என்பதை வைத்துத்தான் அவன் வாழ்ந்த நாட்கள் கணக்கிடப்படும்' என்கிறார் ஹென்ரி டேவிட் தாரோ. வாசிப்பின் மூலம் பல சாதனைகள் நிகழ்ந்ததாக வரலாறு சொல்கிறது. புத்தக வாசிப்பால் உயர்ந்தவர்கள் பலர் இருக்கிறார்கள். வாசிப்பு என்பது பல நன்மைகளைத் தந்துகொண்டு இருக்க... அதைக் கொண்டாட வேண்டிய இளைஞர்கள், அதைவிட்டுத் தூர விலகி நிற்பது ஏன்? மறந்துபோன வாசிப்பை மீட்டு எடுப்பது எப்படி? வழி சொல்கிறார்கள் கருத்தாளர்கள்...

"இளைஞர்கள் புத்தகம் படிப்பது இல்லை என்பது முழுமையான கருத்து அல்ல; அவர்கள் தேர்வு செய்து படிக்கிறார்கள். அதிலும் குறைவாகப் படிக்கிறார்கள் என்று வேண்டுமானால் சொல்லலாம்" என்று மாறுபட்ட பார்வையுடன் தன் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்கிறார் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன். உரைநடையில் கவிதையின் மென்தன்மையை உணரச் செய்யும் படைப்பாளி. "முந்தைய தலைமுறையில் ஒரு தகவல் தேவை என்றால், அதை நூலகத்தில் சென்று தேடுவோம். ஆனால், இன்றைய தலைமுறையில் நூலகத்தின் இன்னொரு வடிவமாக இணையம் இருக்கிறது. அதனால், புத்தகத்தைத் தேடிப் போகும் அந்தத் தேடுதல் இன்று இளைஞர்களிடம் இல்லை.

இதற்கு முந்தைய தலைமுறையில் சிறு வயதில் இருந்தே இலக்கியத்திலோ, இசை யிலோ அல்லது வேறு ஏதேனும் கலைகளிலோ ரசனையை ஏற்படுத்தி, வீடு நம்மை வளர்த்தது. ஆனால், இன்று அந்த நிலை இல்லை. பாடப் புத்தகங்கள் தவிர, வேறு எதுவும் படிக்கத் தேவை இல்லை என்கிற நிலை ஏற்பட்டுவிட்டது. 'புத்தகம் படிப்பதால் பயன் ஒன்றும் இல்லை' என்கிறார்கள் பலர். அது தவறு. எல்லாப் புத்தகங்களும் அதனதற்கான பயனை உடையது தான். நமக்குத்தான் புத்தகங்களைப் பயன்படுத்தத் தெரிவது இல்லை. என்ன புத்தகங்கள் படிக்கிறீர்கள் என்பதைவிட, எதற்காகப் புத்தகம் படிக்கிறீர்கள் என்பதும் முக்கியம். பலருக்கு 10 பக்கங்கள் படித்தால், அடுத்த சில நிமிடங்களில் படிக்கிற ஆர்வமே வடிந்து விடுகிறது. மேம்போக்காகப் படிக்காமல் ஆழ்ந்து படிக்க வேண்டும். வாசிப்பை அதிகப் படுத்திக்கொள்ள எளிய வழிகள் இருக்கின்றன.

ஒரு மாதத்துக்கு நான்கு புத்தகங்கள் என்று படித்தால்கூட, வருடத்தில் 50 புத்தகங்கள் படித்துவிடலாம். அடுத்த வருடம் இந்த எண்ணிக்கை இன்னும் கூடும். இந்தப் புத்தகங்களை நீங்களே போய் வாங்கிப் படிக்க வேண்டும். படிப்பதோடு நின்றுவிடாமல், படித்த புத்தகத்தைப்பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும். சராசரி வாசகர்கள் புத்தகங்களை விலை கொடுத்து வாங்குவது இல்லை. ஏனென்றால், எல்லாப் புத்தகங்களும் இணையத் தில் கிடைத்துவிடும் என்று நினைக்கிறார்கள். அது தவறான கருத்து. மேலும், கைகளில் புத்தகங்களைப் புரட்டி, ஒவ்வொரு எழுத்தாக வாசித்து, அதன் மணத்தைச் சுவாசித்து என புத்தகத்துடனான உறவு தரும் சந்தோஷம் வேறு எதிலும் இல்லை.

ஹெலன் கெல்லரின் 'என் கதை', பிரெஞ்சு எழுத்தாளர் அந்த்வான்த் செந்த் எக்சுபெரி எழுதிய 'குட்டி இளவரசன்', டொமினிக் லேப்பியர் எழுதிய 'நள்ளிரவில் சுதந்திரம்', வெ.ஆனைமுத்து தொகுத்த 'பெரியார் சிந்தனைகள்', புதுமைப்பித்தன் கதைகள் ஆகிய நூல்களைத் தீவிரப் புத்தக வாசிப்பாளர்கள் அனைவரும் கட்டாயமாகப் படிக்க வேண்டும். இந்தப் புத்தகங்கள் உங்களின் வாழ்க்கை மீதான பார்வையை மாற்றும். இவை தவிர, அனைவரும் தமிழ் அகராதியை வைத்திருக்க வேண்டும். சிங்கப்பூரில் புத்தகம் படிக்கும் மாதம் என்ற ஒன்றை அறிவிக்கிறார்கள். ஆஸ்திரேலியா வில் மதிய உணவு இடைவேளைகளில் 'புத்தக வாசிப்பு நேரம்' என ஒன்றை அலுவலகங்கள், மருத்துவமனைகள் ஆகிய இடங்களில் கடைப்பிடிக்கிறார்கள். அமெரிக்கா வில் வருடம் தோறும் 10 சிறந்த புத்தகங்களைத் தேர்ந்தெடுத்து, அதை இலவசமாக மக்களிடம் கொடுக்கிறார்கள்.

நம் நாட்டில், அப்படியான விஷயங்களில் கவனம் செலுத்துவது மிகவும் குறைவு. படிப்பதற்கான இடங்களே இங்கு இல்லை. பூங்காக்கள், பொது இடங்கள் ஆகியவற்றில் புத்தகம் படிப்பதற்காகத் தனியே ஓர் இடத்தை ஏற்படுத்த வேண்டும். புதிதாக வந்திருக்கிற நூல்களை நூலகங்களே அறிமுகப்படுத்த வேண்டும். சமீபத்தில் எடுக்கப்பட்ட ஓர் ஆய்வு, 30 வயது முதல் 50 வயதுக்கு உட்பட்டவர்கள் புத்தகங்கள் படிப்பது இல்லை என்று கூறுகிறது. இது கவலைக்குரிய விஷயம்" என்று நதியின் நீரோட்டமாக வாசிப்பின் அவசியம் உணர்த்துகிறார் எஸ்.ராமகிருஷ்ணன்.

"படிக்கும் பழக்கம் இன்றைய இளைஞர்களிடத்தில் இல்லை என்று முற்றிலுமாக மறுத்துவிட முடியாது. முன்பைவிட வெகுஜனப் பத்திரிகைகளை வாசகர்கள் அதிகமாகப் படிக்கிறார்கள். ஆனால், தீவிர வாசிப்பு என்பது அவ்வளவாக இல்லை" என்று தொடங்குகிறார் கவிஞர் மாலதி மைத்ரி.

"வெகுஜனப் பத்திரிகைகள்தான் இளைஞர்களுக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டும். ஆனால், அந்த ஊடகமே சினிமாவின் பின்னால்தான் சுற்றிக்கொண்டு இருக்கிறது. அதைக் குறைத்துக்கொண்டு வாசிப்பை மீட்டெடுக்கும் வகையில், நல்ல பகுதிகளைக் கொண்டு வருவது வெகுஜனப் பத்திரிகைகளின் கடமை. அதேபோல கல்விக் கூடங்கள், அதிலும் ஆரம்ப நிலைக் கல்விக் கூடங்களில் நூலகம் என்பது மிக ஏழ்மையான நிலையில் இருக்கிறது. முன்பெல்லாம், நூலக வாசிப்பு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகப் பள்ளிகளில் 'லைப்ரரி பீரியட்' என்று வைத்திருப்பார்கள். இன்று எந்தப் பள்ளியில் அது இருக்கிறது? இன்னும் பல பள்ளிகளில் நூலகத்தைப் பூட்டிவைத்து இருக்கிறார்கள். காரணம், மாணவர்கள் கிழித்துவிடுவார்களாம். ஒரு புத்தகத்தை எப்படிக் கவனமாகக் கையாள வேண்டும் என்று கற்றுத்தருவதும்கூட நூலக ஆசிரியர்களின் கடமை அல்லவா?

வீடுகள் இன்னொரு முக்கியமான காரணம். கதைப் புத்தகங்கள் படித்தால் கெட்டுப் போய்விடுவான் என்ற மூடநம்பிக்கை இன்னும் பல குடும்பங்களில் நிலவுகிறது. மாணவர்களும் தங்கள் மேல் எது திணிக்கப் படுகிறதோ, அதுதான் சரியானது என்று கருதுகிறார்கள். அப்படி இல்லாமல், தங்க ளுக்கு எது சரி என்பதைத் தெரிந்துகொண்டு தேர்வு செய்து படிக்க வேண்டும். பாலின சமத்துவத்தைக்கூட வாசிப்பு மட்டுமே வழங்க முடியும்.

என்னுடைய அனுபவத்தில் ஜார்ஜ் ஆர்வெல் எழுதிய 'விலங்குப் பண்ணை', பாரதியார் கவிதைகள், காந்தியின் 'சத்திய சோதனை', 'பெரியாரின் வாழ்க்கை வரலாறு', சிவகாமி எழுதிய 'ஆனந்தாயி' ஆகிய நூல்களை தீவிர வாசிப்பாளர்களுக்கும், தொடக்க நிலை வாசிப்பாளர்களுக்கும் பரிந்துரை செய்கிறேன். இன்று நான் ஒரு பெண்ணியவாதியாகவும், பாலின சமத்துவம் பற்றி எழுதவும், பேசவும் எனக்கு சிந்தனை யைத் தூண்டியது பெரியாரின் 'பெண் ஏன் அடிமையானாள்?' என்கிற நூல். பெண்கள் ஒவ்வொருவரும் நிச்சயம் படிக்க வேண்டிய நூல். வாசியுங்கள் என்று யாரையும் கட்டாயப்படுத்த முடியாது. நீங்களாகவே ஆர்வம் கொண்டு வாசித்தால்தான் சிந்தனை மேம்படும்" என்கிறார் மாலதி மைத்ரி.

"இன்று நேற்று அல்ல... இளைஞர்கள்பற்றிய கவலை எப்போதும் எல்லோருக்கும் இருக்கிறது. இப்போதைய கவலை இளைஞர்களிடத்தில் வாசிப்புப் பழக்கம் இல்லை என்பதுதான். எந்த ஒரு செடியும் அந்தரத்தில் வளர்ந்துவிடுவது இல்லை. அது நடப்பட்ட மண், ஊற்றப்பட்ட நீர், போடப்பட்ட உரம், அதற்கான தட்பவெப்பம் என அனைத்து சங்கதிகளையும் உள்ளடக்கியது அதன் வளர்ச்சி. அப்படி இளைஞர்கள் வாசிக்காமல் இருப்பதற்கான காரணம், அவர்களின் பின்புலம். எந்தச் சூழ்நிலையில் இருந்து அவர்கள் வருகிறார்கள் என்பது முக்கியம்" என உவமையுடன் மனதைப் பண்படுத்தும் சிந்தனையைக் கிளறுகிறார் தமிழ் நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மாநிலத் தலைவர்
ச.தமிழ்ச்செல்வன்.

"குடும்பத்தில் யாருக்கும் புத்தகம் படிக்கும் பழக்கம் கிடையாது. அப்படி இருக்க, ஓர் இளைஞனிடத்தில் வாசிப்பை எப்படி எதிர்பார்க்க முடியும். வீட்டில் அனை வரும் டி.வி. பார்ப்பதற்கு இடம் இருக்கிறது. அனைவரும் அமர்ந்து சாப்பிட நேரம் இருக்கிறது. ஆனால், அனைவரும் சேர்ந்து புத்தகம் வாசிக்கவோ, வாசித்ததைப்பற்றி பகிர்ந்துகொள்ளவோ நேரம் ஒதுக்குவது இல்லை.

இன்றைய இளைஞர்கள் அவர்களது துறை சார்ந்த, அவர்களுக்குத் தேவையானவற்றை மட்டும் விழுந்து விழுந்து படிக்கிறார்கள். சமூக அக்கறை சார்ந்த வாசிப்பு என்பது இல்லை.

எதைப் படிக்கிறீர்களோ இல்லையோ, தமிழர் பண்பாடுபற்றி எந்தப் புத்தகம் கிடைத்தாலும் வாசிக்கத் தவறாதீர்கள். தொ.பரமசிவம் எழுதிய 'பண்பாட்டு அசைவுகள்', ஜார்ஜ் புலிட்சர் எழுதி ஆர்.கே.கண்ணன் மொழிபெயர்த்த 'மார்க்சிய மெய்ஞானம்', ஆங்கிலத்தில் ஜேரட் டைமன்ட் என்பவர் மனித குல வரலாற்றைப்பற்றி 'தி ரைஸ் அண்ட் ஃபால் ஆஃப் தி தேர்ட் சிம்பன்ஸி',

கு.அழகிரிசாமியின் கதைகள் ஆகிய நூல்களைத் தவறாமல் வாசிக்க வேண்டும். தவிர, தோழர் இ.எம்.எஸ். நம்பூதிரிபாட் எழுதிய 'இந்தியன் பிளானிங் இன் கிரைசிஸ்' என்கிற புத்தகம், பொருளாதாரம்பற்றி நிறையத் தகவல்களைக் கற்றுத்தரும்.

தமிழகத்தின் பல இடங்களில் புத்தகக் கண்காட்சி அதிகம் நடந்தாலும், வாஸ்து சாஸ்திரம், ஜோதிடம்போன்ற நூல்கள்தான் அதிகம் விற்பனை ஆகின்றன. வாசிப்பின் மூலம் இந்த மூட நம்பிக்கைகளில் இருந்து விடுபடுவது அவசியம்" என்கிறார் தமிழ்ச்செல்வன்.

"20 ஆண்டுகளுக்கு முன்பு திராவிடம், தேசியம், பொதுவுடைமை என அரசியல் கட்சிகளின் தாக்கங்கள் இல்லாமல் இருந்த இளைஞர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு. அந்தத் தாக்கம் இன்று குறைந்த அளவுதான் இருக்கிறது. அதனால் வாசிப்பு என்பதும் குறைந்து இருக்கிறது" என வாசிப்பை அரசியல் பின்னணியுடன் விளக்குகிறார் நீலகண்டன். பல அரிய புத்தகங்களை 'கருப்புப் பிரதிகளா'க வெளியிட்டு வருபவர். "சிறு பத்திரிகைகளின் வளர்ச்சி சமீப காலமாக நல்ல மாற்றத்தைக் கொண்டுவந்து இருக்கிறது. வெகுஜனப் பத்திரிகைகளைப் படிப் பதில் ஆர்வம் காட்டும் இளைஞர்கள், சிறு பத்திரிகைகளைப் படிப்பதில் அவ்வளவாக ஆர்வம் காட்டுவது இல்லை.

முன்பெல்லாம் அரசியல் கட்சிகளின் மன்றங்கள், படிப்பகங்கள் ஆகியவை இருந்தன. அங்கு வரும் கட்சிப் பத்திரிகைகளைப் படிக்கத் தொடங்கி, அதன் அடுத்த கட்டமாக நூலகங்களைத் தேடிச் செல்லும் நிலை இருந்தது. அதாவது, அடிப்படையில் இயக்க வாசிப்பை மேற்கொண்டு, அதன் வழியே இலக்கியம், அறிவியல், வரலாறு என வெவ்வேறு தளங்களில் வாசிப்பை விரிவாக்கிக்கொண்டார்கள். அதற்கான சூழ்நிலை இன்று இல்லை.

என்னைப் பொறுத்தவரையில் எஸ்.வி.ராஜதுரை, வ.கீதா எழுதிய 'சுயமரியாதை சமதர்மம்', அம்பேத்கர் எழுதிய 'சூத்திரர்கள் யார்?', ராகுல சாங்கிருத்தியாயன் எழுதிய 'வால்காவில் இருந்து கங்கை வரை' ஆகிய நூல்களை வாசிப்பது, சமூகத்தின் மேல் விழுந்து இருக்கும் உங்கள் பார்வையைத் திருத்தும். அரசியல் வரலாற்றில் இருந்து விடுபட்ட சமூகமாக வளர்த்து எடுக்கப்பட்டு இருக்கிற நிலையில், வாசிப்பு மட்டுமே உங்களைச் சிந்திக்கவைக்கும்... சீர்ப்படுத்தும்" என்று தன் கருத்தை முன்வைக்கிறார் நீலகண்டன்.

"ஒரு புத்தகத்தை நீங்கள் தேடிப் போகும் தூரம், பயணம், நேரம், செலவுபோன்ற அசௌகரியங்கள் எல்லாவற்றையும் இணையம் குறைக்கிறது என்பதால், இன்றைய இளைஞர்களிடையே இணைய வாசிப்புக்கு ஆதரவு பெருகுகிறது" என்று தொடங்குகிறார் வலைப்பூ எழுத்தாளர் ஜியோரம் சுந்தர்.

"ஆனாலும், தகவல்களுக்காக, மின்னஞ்சல் செய்வதற்காக, சினிமா பாடல்களைப் பதிவிறக்கம் செய்வதற்காக எனப் பல விஷயங்களுக்காக இணையம் பயன்படுத்துபவர்களைவிட, வாசிப்புக்காக இணையத்தைப் பயன்படுத்துகிறவர்கள் குறைவுதான். தினசரிகள், இதழ்கள், சிறுபத்திரிகைகள் என பலவற்றையும் இணையத்தின் மூலமாகவே வாசிக்கலாம். தவிர, எழுத்தாளர்கள் பலர் தங்களுக்காகத் தனியே ஒரு தளத்தை ஏற்படுத்தி, அதில் தங்கள் நூல்களை வைத்திருக்கிறார்கள். அப்படி யும் வாசிக்கலாம். இணைய வாசிப்பின் இன்னொரு முகமாக, தனிநபர் வலைப்பூக்கள் இருக்கின்றன. அவற்றையும் வாசிக்கலாம்.

நகரத்தில் இருப்பவர்களுக்கு இணையம் கிடைக்கிறது என்பதால், இணைய வாசிப்பு ஓரளவு வளர்ச்சி கண்டு இருக்கிறது. மற்றபடி, கிராமத்தில் இருப்பவர்களுக்கு இணைய வாசிப்பு கடினம்தான். மேலும், 'இம்மீடியசி' என ஒரு விஷயம் இருக்கிறது. அதாவது, ஓர் எழுத் தாளர் தன் வலைப்பூவில் தன் படைப்பை வெளியிட்டால், அதை உடனுக்குடன் 'சுடச்சுட' வாசித்துவிடலாம். ஏதேனும் ஒரு துறைபற்றி ஆய்வு செய்ய வேண்டும் என்றால், அதற்கான ஆவணங்களை நீங்கள் எவ்வளவு தூரம் சென்று தேட முடியும்? அதுவே இணையத்தில் சில நொடிகளில் அலசிவிட முடியும். இது இணைய வாசிப்பில் கிடைக்கிற இன்னொரு வசதி. புத்தகம், இணையம் எதுவாக இருந்தாலும் என்ன, வாசிப்பு நிச்சயம் உங்களுக்குப் பல கதவுகளைத் திறந்துவிடும்" என்கிறார் ஜியோரம் சுந்தர்.

'உங்களுக்குள் உறைந்து இருக்கும் மனிதத்தை புத்தக வாசிப்பு மட்டுமே உருகவைக்கும்' என்கிறான் ஃபிரான்ஸ் காஃப்கா. புத்தகங்கள் உங்கள் நண்பர்களாக இருக்கட்டும். புத்தகங்கள் உங்களின் வழிகாட்டியாக இருக்கட்டும். புத்தகங்கள் உங்கள் சிந்தனையைக் கிளறிவிட அனுமதியுங்கள். வாசிப்பு அனுபவத்தைப் பிறருடன் பகிர்ந்துகொள்ளுங்கள். வாசிப்பு என்பது ஓடும் நதியைப்போல... ஒரு புத்தகம் இன்னொரு புத்தகத்துக்கு அழைத்துச் செல்லும். அது இன்னொன்றுக்கு அழைத்துச் செல்லும். முடிவில்லா அந்த நதியில் மூழ்கி அனுபவங்களை சுவாசியுங்கள். இந்த உலகத்தை நேசியுங்கள்!

Saturday, October 23, 2010

Wisdom of Not Knowing…

A farmer had only one horse. One day, his horse ran away. All the neighbors came by saying, “I’m so sorry. This is such bad news. You must be so upset.” The man just said, “We’ll see.” A few days later, his horse came back with twenty wild horses. The man and his son corralled all 21 horses. All the neighbors came by saying, “Congratulations! This is such good news. You must be so happy!” The man just said, “We’ll see.” One of the wild horses kicked the man’s only son, breaking both his legs. All the neighbors came by saying, “I’m so sorry. This is such bad news. You must be so upset.” The man just said, “We’ll see.” The country went to war, and every able-bodied young man was drafted to fight. The war was terrible and killed every young man, but the farmer’s son was spared, since his broken legs prevented him from being drafted. All the neighbors came by saying, “Congratulations! This is such good news. You must be so happy!” The man just said, “We’ll see.”

Thursday, September 23, 2010

அசாதாரண மனிதர்கள்

இன்றைய சராசரி சாதாரண மனிதர்களே, பிற்காலத்தில் அசாதாரண மனிதர்கள் ஆகின்றனர். பிறவியிலேயே யாரும் அசாதாரண மனிதர்கள் அல்லர். இதற்கு உதாரணமாக பலரைக் கூறலாம்.

ஜெர்மானியராகப் பிறந்தவர் விஞ்ஞானமேதை ஐன்ஸ்டீன். நாஜிகலால் நாடு கடத்தப்பட்டவர். அமெரிக்காவில் அடைக்கலம் புகுந்தவர். அமெரிக்காவில் பிரின்ஸ்டன் நகரில் உள்ள ஆராய்ச்சி சாலை அவருக்காக ஒதுக்கப்பட்டது. முதல் முறையாக அந்த ஆராய்ச்சி சாலைக்கு அவரை அழைத்துச் சென்று சுற்றிக்காட்டி அவருக்கு திருப்த்திதானா? ஏதும் வசதிக் குறைவுகள் உள்ளனவா என்று அமெரிக்க விஞ்ஞானிகள் விசாரித்தனர்.

தயங்கித் தயங்கி மெதுவான குரலில் ஐன்ஸ்டீன் சொன்னார். “இங்கு எல்லாம் வசதியாகவே இருக்கிறது. ஒரே ஒரு குறை” என்று இழுத்தார். “என்ன என்று சொல்லுங்கள் உடனே சரி செய்யப்படும்” என்றனர். அமெரிக்க விஞ்ஞானிகள் அறை ஓரத்தில் இருந்த குப்பைக் கூடையைச் சுட்டிக்காட்டி, “இது ரொம்பவும் சிறியதாக இருக்கிறதே, கொஞ்சம் பெரிய குப்பைத்கூடை இருந்தால் நல்லது” என்றார். திகைத்துப் போய் “பெரிய குப்பைக்கூடையா? எதற்கு?” என்றார்கள்.

ஐன்ஸ்டீன் சொன்னார், “நான் என்ன மேதாவியா, எல்லா ஆராய்ச்சிகளையும் முதலிலேயே சரியாகச் செய்ய… தப்புத் தப்பாகச் செய்வேன். எழுதி எழுதிப் பார்த்தால் எல்லாம் தப்புத் தப்பாக இருக்கும். உடனே கிழித்து எறிந்து விட்டு மீண்டும் மீண்டும் எழுதுவேன். இந்த முட்டாளுக்கு ஒரு விஷயத்தை சரியாகச் செய்ய நிறைய சந்தர்ப்பம் வேண்டும். தவறுகளைப் புதைக்க கொஞ்சம் பெரிய குப்பைக் கூடையும் வேண்டும்” என்றார். அவரே அப்படி என்றால்… நாமெல்லாம் எப்படி?

சாதாரண மனிதர்களில் இருந்துதான் அசாதாரணர்கள் தோன்றுகிறார்கள். நாம் சாதாரணம் என்று சாதாரணமாகி விடவேண்டாம். நாம் ஜெயிக்கப் பிறந்தவர்கள். சின்னச் சினனத் தோல்விகள். சின்னச் சின்னச் சறுக்கல்கள்… வீழ்ச்சிகள் ஒரு பெரிய விஷயமே அல்ல. எதை இழந்தாலும் நம்பிக்கையை இழக்காதீர்கள்.

Monday, September 13, 2010

Innovate and never ever stop Innovating!

Innovate - இந்த வார்த்தைக்கு 'எதையேனும் புதிதாகக் கண்டுபிடிப்பது அல்லது

அறிமுகப்படுத்துவது' என்று அர்த்தம் சொல்கிறது அகராதி. அர்த்தம் ஐந்து வார்த்தைகளுள் அடங்கிவிட்டது. ஆனால், அதன் நீள அகல விஸ்தீரணம் எந்தக் கற்பனை எல்லைகளிலும் அடங்காதது.

தேவைதான் கண்டுபிடிப்பின் தாய். ஆர்வம் உந்தும் அறிமுகங் கள்தான் இந்த உலகத்தைச் செலுத்திக்கொண்டே வந்திருக்கின் றன. சிக்கிமுக்கி தீப்பொறி எண் ணங்கள்தான் ஐ-பேட் யுகம் வரை அசாத்தியங்களைச் சாத்தியப்படுத்தி வருகின்றன. 'மாஸ்டர் மைண்ட்' நபர்களிடம்தான் அது எழும் என்று ஏதும் இல்லை. அப்படியாக சிந்திக்கப் பழகியவர்களைப் பின்னர் உலகம் 'மாஸ்டர் மைண்ட்' என்று கொண்டாடும். உங்களுக்கும் 'மாஸ்டர் மைண்ட்' ஆக ஆசையா? சிந்திப்பதற்கு எந்தத் தடையும் வைத்துக்கொள்ளாதீர்கள் என் கிறார் மருத்துவர் ரேகா ஷெட்டி. 'Innovate' என்ற புத்தகத்தில் வணிக உலகத்தில் நிகழ்ந்த அபார ஆச்சர்ய மாற்றங்களை அடுக்கிக்கொண்டே செல்கிறார். அதில் இருந்து சில துளிகள்...

நீங்கள் எதுபற்றிப் பேசுவதாக இருந்தாலும் அல்லது, ஒரு விஷயத்தைப்பற்றி விளக்குவதாக இருந்தாலும், அதற்கு ஒரு தலைப்பு கொடுத்துப் பேசத் துவங்குங்கள். செய்தித்தாள், வார இதழ்களில் பளீர் சுளீர் என ஒரு தலைப்பு கொடுப்பார்களே... அதுபோல!

இப்படிச் செய்வது ஓர் ஆர்வத்தைத் தூண்டுவது ஒருபுறம், தக்க தலைப்பு தேர்ந்தெடுப்பதற்காக அந்த விஷயத்தை மீண்டும் மீண்டும் அலசி ஆராய்வது உங்களுக்கே புதுப் புது எண்ணங்களை உருவாக்கும்!

வீடோ, பள்ளி - கல்லூரியோ, அலுவலகமோ நாம் ஒரு விஷயத்தை நோக்கி முனைந்தால், அந்த விஷயத்தோடு சம்பந் தப்பட்ட அனைவரையும் நம்மோடு இணைத்துப் பிணைத்துக் கொள்ள வேண்டும். 2008-ம் வருடத்தில் 456 கிளைகளைத் துவக்க வேண்டும் என்று ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி திட்டமிட்டுச் செயல்படுத்தியபோதும், உலகின் மிக விலை குறைவான கார் தயாரிக்க வேண்டும் என்று முனைந்து, டாடா நானோவை உருவாக்கியபோதும், உலகின் மிக மெல்லிய கடிகாரத்தை வடி வமைக்க வேண்டும் என்று டைட்டன் சாதித்தபோதும் அந்த புராஜெக்ட் சம்பந்தப்பட்ட அனைவரிடமும் அடைய வேண்டிய இலக்கு குறித்த தெளிவான அறிவுறுத்தல் இருந்தது!

குழந்தைகள் உணவு தயாரிக்கும் நிறுவனம் எடுத்த சர்வே அது. பெரும்பாலான பெற்றோர்களின் கவலை, 'என் குழந் தைக்கு முட்டையே பிடிக்கவில்லை. என் குழந்தையின் காலை உணவில் முட்டையைச் சேர்த்துக்கொள்ள என்ன செய்வது?' என்பதுதான். இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காணக் கூட்டப்பட்டு இருந்த விவாதத்தில் 'முட்டையை எப்படி குழந்தைக்குப் பிடிக்கும் வகையில் பரிமாறுவது?' என்று துவங்கி, பலப் பல திருப்பங்களுக்குப் பிறகு, 'குழந்தைகளுக்குப் பிடித்த வகையில் சத்தான காலை உணவு தயாரிப்பது எப்படி?' என்ற நிறுத்தத் துக்கு வந்தது. அதன் பிறகுதான் வித்தியாச சுவைகளில், கலவையான சத்து விகிதங்களில் குழந்தைகள் உணவு வகைகள் மார்க்கெட்டில் நுழைந்து கோடிகளில் மார்க்கெட்டைப் பிடித்தன!

'ஃபேமிலி டாக்டர், ஃபேமிலி வக்கீல் என்று இருக்கும்போது 'ஃபேமிலி பேங்கர்' என்று ஒருவர் ஏன் இருக்கக் கூடாது? என்று யோசித்தோம். அதற்கென முயற்சித்தோம். இப்போது வாடிக்கையாளர்களாக எங்கள் அலுவலகம் வருபவர்கள் உறவினர்களாக எங்க ளிடம் விடைபெறுகிறார்கள்!' என்கிறார் ஆஷா. டச் வங்கியின் தலைமைப் பொறுப்பில் இருக்கிறார். ஆஷா வின் தலைமையில் செயல்படும் குழுவின் ஒவ்வோர் அங்கத்தினரும் ஐந்து கோடி ரூபாய்களுக்குக் குறையா மல் பரிவர்த்தனைகள் மேற்கொள்கிறார்கள். 'ஃபேமிலி பேங்கர் என்று யோசித்ததோடு நில்லாமல், அதை முழு மனதோடு செயல்படுத்தினோம். எங்கள் வாடிக்கையாளர் இல்லத்தின் எந்த நல்லது, கெட்டதும் நாங்கள் இல்லா மல் நடந்ததே இல்லை. அன்று ஒட்டுமொத்த வங்கிக்கும் விடுமுறை தேவைப்பட்டால்கூட, தயங்காமல் அளித்து விடுவோம்!' என்கிறார் ஆஷா.

மாருதி சுஸுகி நிறுவனம் தான் தயாரிக்கும் கார் களின் எடையைக் குறைக்க முடிவெடுத்தது. கிட்டத்தட்ட 2,500 உதிரி பாகங்கள்கொண்டு தயாரிக்கப்படும் காரின் எடையை அசெம்ப்ளிங் யூனிட் மட்டும் நினைத்தால் குறைக்க முடியாது. அதே சமயம், எல்லா உதிரி பாகங்களின் எடையைச் சகட்டுமேனிக்கும் குறைக்க முடியாது. அப்படிக் குறைத்தால் காரின் பெர்ஃபார்மன்ஸ் சீர்குலைந்துவிடும். பிரச்னைக்குத் தீர்வு தேடி முட்டி மோதிக்கொண்டு இருந்தபோது, ஒருவர் மூளையில் பல்ப். '2,500 உதிரி பாகத் தயாரிப்பாளர்களிடமும் அவரவர்கள் தயாரித்து அனுப்பும் பாகங்களில் ஒரே ஒரு கிராம் எடையைக் குறைத்துத் தயாரிக்கச் சொன்னால் என்ன?' சொன்னார்கள். காரின் எடையில் 2.6 கிலோ எடை குறைந்தது, பெர்ஃபார்மன்ஸும் மைலேஜும் அதிகரித்தது. அந்த 'ஒரு கிராம்' சிந்தனைதான் இன்னோவேஷன்!

அப்போலோ மருத்துவமனைகள் இந்தியாவில் பரவலாகச் செயல்படத் துவங்கிய ஆரம்ப காலகட்டத் தில், மிகப் பெரிய எதிர்ப்பினை எதிர்கொண்டது. 'நீங்கள் நோயாளியா? எங்களிடம் வாருங்கள்... நாங் கள் உங்களுக்கு நல்ல சிகிச்சை அளிக்கிறோம்' என்று விளம்பரப்படுத்த முடியாது. 'ஆம்... நான் நோயாளி' என்று யார் தானாகவே முன்வந்து ஒப்புக்கொள்வார்கள். அதிலும் இந்தியர்களின் மனப்போக்கு இந்த விஷயத்தில் உலகப் பிரசித்தம். 'நான் மரணமற்றவன். என்னைச் சுற்றி இருப்பவர்களுக்குத்தான் மரணம் நிகழும். நான் சஞ்சீவி!' என்ற மனநிலையுடனேயே வளைய வருபவர் களிடம் எந்தப் பருப்பும் வேகாது என்று அவநம்பிக்கைக் குரல்கள்தான் எழுந்தன. 'மாத்தி யோசி' தத்துவம்தான் அப்போது அப்போலோவின் துணைக்கு வந்தது. 'நோயாளிகள்தான் மருத்துவமனைக்குச் செல்வார்கள்' என்பது பொதுவிதி. 'தன் ஆயுள் முழுக்க நடை உடை யுடன் ஆரோக்கியமாக இருக்க விரும்புபவர்கள், அப் போலோ மருத்துவமனை வளாகத்தில் மகிழ்ச்சியுடன் உலவுவார்கள் என்பது புது விதி' என்று விளம்பரப்படுத்தினார்கள். இப்போது அப்போலோ எப்போதும் ஹாஸ்பிட்டல் ஃபுல்!

இதில் சில சங்கதிகள் மிக அந்நியமாக, அமல்படுத்த சாத்தியமற்றதாகத் தோன்றுபவர்களுக்கு மட்டும் ஒரு பின்குறிப்பு:

'நிலவில் மனிதன் காலடி எடுத்துவைக்க முடியும்' என்று தோன்றிய முதல் சிந்தனைப் பொறியை நினைத்துக்கொள்ளுங்கள்!

Sunday, September 5, 2010

மதன் பதில்கள்

ரா.அன்பழகன், கோவை-4.

சாதாரணமாக, எல்லோருக்கும் கிடைக்கிற வாய்ப்புகூட எனக்குக் கிடைப்பது இல்லை. நான் துரதிருஷ்டசாலிதானே?

வாய்ப்பு என்கிற ஒரு கதவு மூடிக்கொள்ளும்போது, வேறு பல கதவுகள் திறக்கின்றன என்பது நமக்குத் தெரிந்த பழைய பொன்மொழிதான்! பலர் என்ன செய்கிறார்கள் என்றால், மூடிய கதவுக்கு அருகே, அதையே பார்த்துக்கொண்டு அழுதுகொண்டு இருக்கிறார்கள். கொஞ்சம் திரும்பிப் பார்த்தால்தானே மற்ற கதவுகள் திறப்பது தெரியும்!

சுகந்தாவாசன், பெங்களூரு-20.

இந்தியர்களைப்போல 'நேரம் தவறாமை'பற்றி கவலையே படாத மக்கள் வேறு எந்த நாடுகளில் உண்டு?

எத்தனை நாடுகள் அப்படி என்று தெரியாது! ஏன்? தமிழ்நாட்டிலேயே, மறைந்த தொழில் - விஞ்ஞான மேதை ஜி.டி.நாயுடு மணி 11.23' என்று அப்பாயின்ட்மென்ட் கொடுத்துவிட்டு, கரெக்டாக அங்கே இருப் பவர் என்று கேள்விப்பட்டு இருக்கிறேன். பிரான்ஸ் நாட்டில் எல்லோரும் 'லேட்'டாக வருவதால் பிரச்னை இல்லை. நான் மூன்று முறை கரெக்டாகப் போனால், இரண்டு தரம் லேட்டாகப் போகிறேன். மனசு கூசு கிறது. 'லேட்'டாகப் போவது ஆபத்தானது.

பிப்ரவரி 15, 1876-ல் அமெரிக்காவில் எலிஷா க்ரே என்பவர், ஒரு கருவியைக் கண்டுபிடித்துவிட்டு Patent office-ல் பதிவு செய்ய சாவ தானமாகச் சென்றார். 'அடடா! இரண்டு மணி நேரத்துக்கு முன்னால்தான் மிஸ்டர் கிரஹாம் பெல் என்பவர் இதே கண்டுபிடிப்புடன் வந்து பதிவு செய்துவிட்டாரே!' என்றார்கள். டெலிபோன்!

எஸ்.கதிரேசன், பேரணாம்பட்டு.

உங்கள் பிறவிப்பயனாக எதைக் கருதுகிறீர்கள்?

நான் கருதுவது ஒன்றுதான். பிறவி, பயனாக அமைய வேண்டும்!

Sunday, August 1, 2010

பிரச்னைகள் வரும் போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்

பிரச்னைகளைச் சமாளிப்பதில்தான் வெற்றியாளர் களின் திறன் ஒளிந்திருக்கிறது. பிரச்னைகள் வரும் போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள் என்னென்ன?

1. பொதுவாக நெருக்கடி வரும்போது உணர்ச்சி வசப்படக் கூடாது. பதற்றமடைந்தால் நம்மால் புத்திசாலித்தனமாக யோசிக்க முடியாது.

2. நெருக்கடிகளைச் சமாளிக்கும் பொறுப்பு அந்த நிறுவனத்தின் தலைவருக்குத்தான் அதிகம் உள்ளது. தலைவர்கள்தான் ஊழியர்கள், வாடிக்கையாளர்கள், பங்குதாரர்கள் என அனைவரையும் ஒன்றிணைத்து பிரச்னையைச் சமாளிக்க வேண்டும். விரைவில் சரி செய்யப்படும் என்ற ஊக்கத்தையும் கொடுக்க வேண்டும்.

3. நெருக்கடி நேரத்தில் என்ன பிரச்னை, யார் காரணம் என்பது பற்றி தெளிவாகச் சொல்லிவிடுவது நல்லது.

4. பிரச்னை உருவான அடுத்த நிமிடமே அது பற்றி எல்லோருக்கும் தெரியப்படுத்துவது நல்லது. கப்பல் மூழ்கும் சமயத்தில் சொல்வதை யாரும் ஏற்க மாட்டார்கள்.

5. நெருக்கடியின் போது நம்மிடம் இருக்கும் மனித வளம், பணம் போன்ற வளங்களை சரியாகப் பயன் படுத்திக் கொள்ள வேண்டும்.

6. குறுகிய காலத்துக்கு பிரச்னையை சரிசெய்தால் போதும் என்று நினைக்காமல் நீண்ட காலத்துக்கான தீர்வாக இருப்பது நல்லது. இதனால் நிறுவனத்துக்கு கொஞ்சம் நஷ்டம் ஏற்பட்டாலும் இமேஜ் அதிகரிக்கும்.

7. நெருக்கடி காலங்களில் கட்டாயம் செய்யக் கூடாதது, தகவல்களைத் தடுப்பது. நிறுவனத்தில் என்ன நடக்கிறது என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்த வேண்டும். அனைவரிடத்திலும் வெளிப்படையாக இருப்பதன் மூலம் நல்லாதரவைப் பெறமுடியும்.

8. எவ்வளவு சிறிய பிரச்னையானாலும் அதை மேலாளரிடமோ அல்லது ஊழியர்களிடமோ ஒப்படைத்து விட்டு கண்டுகொள்ளாமல் இருப்பது கூடவே கூடாது. நீங்கள் களத்தில் இறங்கி சரி செய்ய வேண்டும்.

9. அரசுக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, வருமான வரி, விற்பனை வரி போன்றவற்றைச் செலுத்தாமல் இருப்பதால் ஏற்படும் நெருக்கடிகளுக்குக் காரணம், அந்த நிர்வாகம்தான். அது மாதிரியான பிரச்னைகள் ஏற்படாதவாறு அந்த நிறுவனம்தான் பார்த்துக் கொள்ள வேண்டும்.

10. எந்தச் சூழலிலும் தொழில் நேர்மையில் சமரசம் கூடாது. நியாயமற்ற முறைகளில் தொழில் நடத்தும் போது அதற்குரிய பிரச்னைகளை தினசரி சந்தித்துதான் ஆகவேண்டும்'' என்றார் ஸ்ரீராம்.

Wednesday, July 28, 2010

அமெரிக்க கனவு - அதன் விளைவு?

'அமெரிக்க கனவு' என்று ஒன்று உண்டு. அமெரிக்கா மட்டுமின்றி வளர்ந்த நாடாகத் துடிக்கும் ஒவ்வொரு தேசமும் ஓடுவது இதைத் தேடித்தான். என்ன அது? கார், வீடு, ஏ.ஸி., மொபைல் போன், மைக்ரோ வேவ், டோஸ்டர், ஐபாட் போன்றவற்றை வாங்கும் திறன், அதனை ஒட்டிய வாழ்க்கை முறை. இதுதான் அமெரிக்கன் ட்ரீம்!

இதன் விளைவு?

நீர், நில ஆக்கிரமிப்பு, தாவர, மிருக இனங்கள் அழிப்பு, மிதமிஞ்சிய கரிம வாயுவின் வெளியேற்றம், தட்பவெப்ப பருவநிலை மாற்றங்கள், நோய்கள், இயற்கைச் சீற்றங்கள்... அமெரிக்கா துவக்கி வைத்த இந்த வாழ்க்கைமுறை இன்று பூமி பிழைக்குமா என்று சர்ச்சை செய்யும் அளவுக்குக் கொண்டுபோயிருக்கிறது. இது பற்றிய விவாதத்தின் ஓர் அங்கமாக 2001-ல் அப்போதைய அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷிடம், 'அமெரிக்கா தன் வாழ்க்கை முறையை மாற்றிக்கொள்ளவேண்டிய நேரம் வந்துவிட்டதா?' என்று கேட்டதற்கு, 'கண்டிப்பாக இல்லை. நம் வாழ்க்கை முறை நம் வலிமையான பொருளாதார நிலையின் பிரதிபலிப்பு. அமெரிக்க வாழ்க்கை முறை கொண்டாடப்பட வேண்டியது!' என்று பதில் சொல்லியிருந்தார். அவர் பரிந்துரைத்த வாழ்க்கைமுறை அவரையே 2008-ல் சவுதி அரேபியாவிடம் பெட்ரோல் விலைக்காக மண்டியிட வைத்தது.

சரி, பூமியின் தற்போதைய நிலை என்ன?

'ஹாட், ஃப்ளாட் அண்ட் க்ரவுடட்' என்று தலைப்பிலேயே யதார்த்தத்தைச் சொல்கிறார் தாமஸ் ஃப்ரீட்மேன். மூன்று முறை புலிட்சர் விருது பெற்றவரும், 'வாஷிங்டன் போஸ்ட்' பத்திரிகையில் பணிபுரிந்து, உலகம் முழுவதும் சுற்றி வந்தவரும், 'வேர்ல்டு இஸ் ஃப்ளாட்' (World is Flat) என்ற புத்தகத்தின் மூலம் அதிகக் கவனம் பெற்றவருமான ஃப்ரீட்மேன் எழுதியுள்ள இந்தப் புத்தகத்தை நம் பூமி பற்றிய பிராக்ரஸ் ரிப்போர்ட் என்று சொல்லலாம். சரி, என்ன ரிசல்ட்? ஒரே வார்த்தைதான்:

'கவலைக்கிடம்!'

மூன்று நிதர்சனங்களை வரிசையாகச் சொல்கிறார்.

ஹாட்... பூமியின் தட்பவெப்ப நிலை அதிகரிப்பு. தொழில் புரட்சிக்கு பின் நிலக்கரி மற்றும் பெட்ரோலுக்கான தோண்டுதல், எஃகு உற்பத்தி, அதிக கொதிநிலையில் பொருட்கள் உற்பத்தி, வாகனப் புகை என பல காரணங்கள்... பாமர மொழியில் சொன்னால் காடுகள் குறைந்து கார்கள் பெருகி வருவதன் விபரீத முடிவு!

க்ரீன் ஹவுஸ் கேஸஸ் பாதிப்புகள் பற்றிச் சொல்லும்போது மாட்டின் ஏப்பமும் கூட ஒரு முக்கியக் காரணம் என்ற செய்தி தெரிகிறது! மாட்டின் ஏப்பத்தில் உள்ள மீத்தேன் என்ற வாயு கரிம வாயுவை விட 21 மடங்கு சக்தி வாய்ந்தது.

ஒரு மாடு சராசரியாக ஒரு நாளைக்கு 600 லிட்டர் மீத்தேனை வெளியேற்றுகிறது என்று படிக்கும்போது திடுக்கிட்டுப் போகிறோம். மாடு இன்று மிருகமாக எண்ணப்படாமல், பால், இறைச்சி, தோல் உற்பத்தி செய்யும் இயந்திரமாகக் கருதப்பட்டு, மாஸ் புரொடக்ஷன் செய்யப்பட்டதால் வந்த ஆபத்து இது!

அடுத்து ஃப்ளாட்... பூமியின் போக்கு தட்டையாகிறது என்கிறார். இது பூகோள ரீதியாகவோ, பொருளாதார ரீதியாகவோ அல்ல... உலகமயமாக்கமும் தொழில் நுட்பமும் தந்த வாய்ப்புகளால் நடுத்தர வர்க்கம் பெருகுவதுடன் நுகர்தலும் பெருகிவருகிறது. அமெரிக்கக் கனவைத் தேடி ஓடும் ஓட்டத்தால் நாம் சந்தையை மட்டும் பங்கிட்டுக் கொள்ளவில்லை. இயற்கை வளங்களையும்தான்!

புதிய வாய்ப்புகளால் உலகம் தட்டையாகி புதிய வாழ்க்கை முறைக்கு பல கோடி மக்கள் உட்படும்போது அதற்காக செலவு செய்யப்படும் சக்தி (எனர்ஜி) பன்மடங்காகப் பெருகும். அனைவர் வீட்டிலும் விளக்கெரிவதற்கே இனி பல காடுகளை அழிக்கும், பல நிலக்கரி சுரங்கங்கள் ஏற்படுத்தும் நிலை வரலாம்!

மூன்றாவதாக க்ரவுடட்... பூமியின் ஜன நெருக்கடி அதிகரிப்பு. இருவர் தங்கி வந்த அறையில் இருபது பேர் தங்கினால் என்ன நிகழுமோ... அதுதான் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. இன்றைய பூமியின் ஜனத்தொகை 6.7 பில்லியன். இன்னும் 50 வருடங்களில் 40-45% அதிகரிப்பு நிகழும் என்கிறார்கள் வல்லுநர்கள். இதன் பாதிப்பு பின்தங்கிய நாடுகளில் அதிகம். இது எரிபொருள் பற்றாக்குறையிலிருந்து தீவிரவாதம் வரை அனைத்துக்கும் வழிவகுக்கும்.

மக்கள் அனைவருக்கும் உணவு, கல்வி, வேலை தந்து காப்பாற்ற வக்கில்லாத நிலையில், பூமியைக் காப்பாற்றும் முயற்சிகளில் எப்படி ஈடுபடமுடியும்?

இந்தப் புத்தகம் அமெரிக்காவுக்காக எழுதப்பட்டது. 9/11-க்குப் பிறகு பயத்தால், சந்தோஷத்தால் செய்வதறியாது உள்ள தேசத்துக்கு 'கோட் க்ரீன்' (பசுமைப் புரட்சி என்கிறார்) மூலம் உலகத்தைச் சுத்திகரிக்கும் பணிக்குத் தலைமை தாங்க அழைக்கிறார். இதன் சங்கிலித் தொடராக பெட்ரோல் அரசியல், தொழில்நுட்பம், தீவிரவாதம், ஜனத்தொகை, வறுமை என பல கோணங்களை அலசுகிறார். சீனா பற்றி மட்டுமே தனியாக ஒரு பெரிய அத்தியாயம். சீனா மாறினாலே உலகம் மாறிவிடும் என்று வாதாடுகிறார். வேறொன்றுமில்லை, அவ்வளவு ஜனத்தொகை!

அமெரிக்க அதிபர்களின் குறுகியகால கண்ணோட்டங்கள், தொழில் வளர்ச்சிக்காக செய்த சமரசங்கள், குற்றங்கள் என சுவாரஸ்யமாகப் போகிறது புத்தகம். கூடவே, இதைக்கூட பகட்டாக எழுதி உலகம் முழுவதும் விற்க ஒரு அமெரிக்கனால்தான் இயலும் என்று தோன்றுகிறது!

என்ன செய்யலாம் என தீர்மானமான செயல் திட்டங்கள் உள்ளன புத்தகத்தில்! உலகில் எல்லா வாகனங்களிலும் 100% மைலேஜ் அதிகரிக்கச் செய்தால் (ஆராய்ச்சி மூலம்) அதுவே உலகின் எரிபொருள் செலவைப் பாதியாகக் குறைக்கும் என்பன போன்ற பல யோசனைகள் உள்ளன.

அனைத்துத் தொழிலதிபர்களும் அடுத்த நூற்றாண்டைப் பற்றித் தெரிந்துகொள்ள இந்நூல் உதவும். தொழிலில் லாபமும் சுற்றுப்புறத்தின் பாதுகாப்பும் ஒருங்கே சாத்தியம் எனத் தோன்றுகிறது. நம் வாழ்க்கையையும், தொழிலையும் காப்பாற்றும் பொறுப்பை ஆட்சியாளர்கள், மற்றும் அறிவுஜீவிகள் கைகளில் மட்டும் ஒப்படைக்காமல், இவ்விஷயங்களை மக்கள் மன்றத்துக்கு எடுத்துச்செல்வது அவசியம்.

இந்தப் புத்தகத்தை நம் அமைச்சர்கள் படித்தால், தேசத்துக்கு நல்லது. புதிதாகப் பதவியேற்றுள்ள அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு இதைப் பரிந்துரைக்கலாம்... அவர் படிப்பது நம் பூமிபந்துக்கே நல்லது!